#திண்ண மிரண்டுள்ளே சிக்க வடக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-
உண்ணுங்கால்
நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.
மலம், சிறுநீர் இரண்டையும் அடக்க வேண்டாம். ஆண், பெண் மோகம் அதிகம் பெருகாமல் இருக்கப் பழகவும். உணவு உண்ணும்போது தண்ணீர் அருந்துவதைப் குறைக்கவேண்டும். பால்படு பொருட்களில் ஒன்றான மோரினில் நிறைய நீரினை நன்கு கலந்து பயன்படுத்த வேண்டும். நெய்யானது தீக்கூறு உடையதால் அதனை சட்டியில் வைத்து நெருப்பேற்றி உருகியவுடன் உணவுடன் கலந்து உண்ண வேண்டும். இவ்வாறு பின்பற்றுவோரின் பெயரை சொன்னாலே அது அண்டாமல் ஓடிவிடும்.
#பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்,
பகற் புணரோம், பகல் துயிலோம்;
பாயோ முதரமும் மூத்த ஏலஞ்சேர் குழலியரோடு
இளவெளிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையில் படுப்போம்;
மூலஞ்சேர் கறி நுகர்வோர்; மூத்த தயிர் உண்போம்;
முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் உண்ணோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கு ஏதுகலை நாம் இருக்கும் இடத்தே!
பால் சேர்த்த உணவுகளை தினமும் உண்ண வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி தலைமுழுக்கு எடுத்தவுடன், வெந்நீரில் குளிக்க வேண்டும். பகலில் ஆண், பெண் புணர்ச்சி கூடாது. பகலுறக்கம் கொள்ளக்கூடாது. ஆண் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொள்ள விரும்பக்கூடாது. இளவெயில் உடல் மீது படுவதை தவிர்க்க வேண்டும்.
மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. விந்தணுக்களை தேவையின்றி வெளியேற்றக்கூடாது. உறங்கும் போது இடது கையை கீழே வைத்து, அதன் மேல் தலையை வைத்து உறங்குவது நல்லது. மூலக் கடுப்பினை உண்டாக்கக்கூடிய காய், கனிகளை நுகரக்கூடாது. முதல்நாளில் தயாரான பழைய தயிர் உண்பது நல்லது. முதல் நாளில் சமைக்கப்பட்ட உணவு கெடாமல் அமுதமாகி இருந்தாலும் உண்ண வேண்டாம். நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும்.